Saturday, February 27, 2016

என்னை பாதித்த சுஜாதா

நான் தலைவரை(சுஜாதாவை தலைவர் என்பதுதான் சரி) அறிந்தது சரியாகப் பதிமூன்று வயதில். நண்பன் வீட்டில் ஏன் எதற்கு எப்படி? புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே உள்ளே இழுத்துக்கொண்டார். எப்படியாவது முழுப்புத்தகத்தையும் படித்துவிட ஆசைப்பட்டு நண்பனின் அண்ணனிடம் அனுமதி வாங்கி வீட்டுக்கு வந்து அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துப் படித்து முடிப்பதற்குள் உன்பாடு என்பாடு ஆகிவிட்டது. முழுவதும் படித்து முடித்த அந்த விடலைப் பருவ வயதில் புரியாத சில விஷயங்களில் அவரது பாணி கூசவைத்தாலும் படிக்கையில் சுவாரசியமாக இருக்க எனக்குப் பிடித்த புத்தகமாக ஆனது. பள்ளியில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்ற கட்டுரையில் சுஜாதா என்று எழுதியதைப் பார்த்த ஆசிரியர் வித்தியாசமாக உணர்ந்திருப்பார். 

பின்னர் குமுதம், விகடனில் அவர் எழுதிய பல கதைகள் என்னை மேலும் அவர் மேல் பைத்தியம் கொள்ளச் செய்தன. நண்பர்களுக்குப் பிறந்தநாள் என்றாலும் அவர் எழுதிய புத்தகங்களையே பரிசளித்தேன். பிரிவோம் சந்திப்போம், நிறமற்ற வானவில், ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள், மத்யமர் கதைகள், எப்போதும் பெண், ஒரு கோடி ரூபாய் கனவு, தீண்டும் இன்பம், யவனிகா, ஆ போன்ற எழுத்துகள் எங்களை அவர் வசம் செலுத்திவிட்டன. 
ஸ்ரீரங்கத்து தேவதைகள் தூர்தர்சனில் தொடராக வந்த போது அசோக் ரமணியின் பாடலோடு பார்க்கவில்லை என்றால் அன்று பட்டினி கிடக்கும் அளவுக்குச் சென்றேன். குண்டு ரமணி, கடவுளுக்குக் கடிதம், முதல் காதல், பேப்பரில் பேர், பாட்டியின் கண்டிப்பு-பல இடங்களில் என்று மென்மேலும் படிக்கும் இன்பத்தை அளித்துக் கொண்டிருந்தார். 
கற்றதும் பெற்றதும் ஆரம்பித்த காலம் கார்கில் யுத்தம் முடிவடைந்தது. நண்பர்களின் இழப்புதான் இராணுவ வீரர்களை அதிகம் பாதிப்படையச் செய்யும் என்று அவர் எழுதியிருந்த கோணம் முற்றிலும் வித்தியாசமானது.

சிறுகதைகளில் அவர் செய்த வசியம் வேறு யாரும் செய்யாதது! சிவப்பு மாருதியின் கடைசி வரியான வரதராஜ பெருமாள், தேஜஸ்வினியின் கடைசி வரியான அவன் பறக்க ஆரம்பித்தான் போன்ற வரிகள் என்னால்(யாராலும்) மறக்க முடியாதவை.

அவர் கலாம் கூட ஜோசப்பில் படித்தவர் என்று அறிந்ததும் நண்பன் கார்த்தி பெருமை கொண்டு மிதப்பில் திரிவான். அவர் எழுதிய கலாம் பற்றிய நினைவுகள் இன்றும் மறக்க முடியாதவை. ஜஸ்ட் வாட்டர் கலாம்!
இருவரும் இணைந்து ராக்கெட் கட்டுமானம் பற்றி எழுதப்போகும் தொடரை ஆவலை எதிர்பார்த்து ஏமாந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்!

பிரிவோம் சந்திப்போம் புத்தகத்தை மனனம் செய்து வைத்திருந்தேன். நண்பன் கார்த்தி "ஒரு பெண் அழகாக இருந்தால் பல குறைகள் மன்னிக்கப்படுகின்றன" என்ற வரியை அடிக்கோடிட்டு வைத்திருந்தான். 

பாரதி படத்தை அவர் மீடியா ட்ரீம்ஸ் சார்பில் தயாரித்ததை, பாண்டவர் பூமி படப்பிடிப்பை விசிட்செய்ததை விகடனில் படிக்க வாரா வாரம் காத்திருந்தோம். 
திரைப்படங்களில் அவர் வசனம் இடம்பெற்ற காரணங்களுக்காகவே படம் பார்த்த நிகழ்வுகளும் உண்டு. அவர் கதைகள் படமானது என்ற காரணத்துக்காக பிரியா, கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற பழைய(!) படங்களையும் பார்த்தோம். நினைத்தாலே இனிக்கும் பார்க்கக் நேர்ந்த போது கதை வசனம் சுஜாதா என்று டைட்டில் வந்ததும் அகமகிழ்ந்து போனேன். 
பாய்ஸ் படம் பார்த்து பலரும் கழுவி ஊற்றிய போதும் அதை அவர் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் கடந்து சென்றார். 
ரோஜா, திருடா திருடா, தில்சே(ஹிந்தி வசனமும் சேர்த்து), கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து படங்களில் அவர் மணியோடு இணைந்து எழுதிய வசனங்கள் அபாரம். 
இந்தியன், முதல்வன் படங்களை அவர் வசனத்துக்காகவே பார்த்து மகிழ்ந்தோம். 
புதிய இயக்குனர்களின் படங்களிலும் அவர் பரிமளித்தார். கண்ணெதிரே தோன்றினாள், உதயா போன்ற படங்கள் அவர் எழுத்தில் வேறு உயரத்தை அடைந்தன. 
புறநானூறு ஓர் எளிய அறிமுகம், திரைக்கதை எழுதுவது எப்படி? போன்ற புத்தகங்கள் வாங்க இயலா விலையில் இருக்க நண்பர்கள் உதவியோடு படித்தேன். 
ரா.கி.ரங்கராஜன் ஒருமுறை லைட்ஸ் ஆனில் சுஜாதாவின் அறிவின் வீச்சு கம்ப ராமயணத்தில் இருந்து ராக்கெட் இன்ஜினியரிங் வரை அகண்டிருக்கிறது என்று எழுதிய போது பேருவகை கொண்டோம். 
பட்டுக்கோட்டை பிரபாகர் தலைவரின் புத்தக வெளியீட்டின் போது சில வரிகளை மேற்கோள் காட்டியது ஏற்கனவே அதைப் படித்த சந்தோஷத்தை அதிகப்படுத்தியது(சீட்டு பவ் பவ் என்றிருந்தது, இந்த இங்க் தெளிச்ச நாய் கடிக்குமா?). 

க.சீ.சிவகுமார் ஒருமுறை தலைவரைப் பார்க்கச் சென்று, ஒருவரும் இங்கு சும்மா இல்லை என்ற பதிலோடு திரும்பியதை அறிந்து அவரைப் பார்க்க விரும்பிய எண்ணம் மெதுவாக மனதை விட்டு அகல ஆரம்பித்தது. ஆனால் எப்படியாவது அவர் பீச் வாக்கிங் செல்கையில் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு நாள் அவசர வேலையாக பீச் ரோடில் வாகனத்தில் செல்கையில் அப்போதுதான் காந்தி சிலையருகில் நடைமேடையில் ஏறினார். அவரைப் பார்த்த மகிழ்வே போதும். உற்சாகத்தில் நான் பின்னால் அமர்ந்திருந்த தம்பியிடம் கத்தினேன். "டேய், சுஜாதாடா!"

அவன் "யாரந்த பொண்ணு?" என்றான்.

பிற்பாடு அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அன்று நாள் முழுக்க துக்கம்  அனுஷ்டித்தேன். பழைய கம்பெனி Chief இடம் விஷயத்தை சொன்ன போது அதிர்ந்தார். அவரும் என்னைப் போலவே சுஜாதா ரசிகர். போதாததற்கு அவர் நெல்லைக்காரர் வேறு. "எங்க தமிழ்தான் சிறந்ததுன்னு சுஜாதாவே சொல்லிருக்காரு வேய்" என்பார். 

பாரதி மணி பாட்டையா வேறு சுஜாதா பற்றி எழுதியதெல்லாம் படிக்கையில் அவரை ஒரு முறையாவது பார்த்திருக்கலாமே என்று தோன்றும். 
ஆனால் என் தாழ்வு மனப்பான்மையால் அவரைப் போல கலாமையும் பார்க்கும் முன்னரே காலனுக்கு காவு கொடுத்து விட்டேன். 

Monday, October 26, 2015

சைக்கிள் காதை

எல்லோரையும் போல் இல்லாமல் சைக்கிள் கற்றுகொண்டதே எட்டு வயதில்தான். பிரம்மப்ரயத்தனங்களுக்குப் பிறகு கால்களில் நான்கைந்து பெருங்காயத்துடன் சைக்கிள் கற்றுக்கொண்ட காலத்தில் ஒன்பதாவது மேகங்களில் மிதந்தேன். என்னை விட சிறுவயதுச் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டுகையில் வரும் பொறாமை தொலைந்து போயிருந்தது.
சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அப்பாவிடம் கேட்க, வேண்டும் போது அவர் சைக்கிள்-ஐ ஓட்டச் சொல்ல, கடுப்பானேன். தவிர உயரமும் போதாது.
அப்பாவிற்கு நெல்லையில் இருந்து மதுரைக்கு மாற்றலாகிச் சென்றபோது சித்தப்பா கொடுத்த BSA-SLR ஐ நானும் ஓட்ட ஆரம்பித்தேன். அவர் வேலைக்குச் செல்லாத நேரங்களில் என் தேராக அமைந்தது அந்த சைக்கிள். மெதுவாகக் கிளம்பி ஜீவா நகர் தாண்டி டிவிஎஸ் நகரில் புகுந்து (அப்போது அதிகம் நானறியாத அழகிரியின் வீட்டு வழியாக) 19C பஸ் ரூட்டில் பழங்காநத்தம் ரெயில்வே கிராசிங்கில் வலப்புறம் திரும்பி மறுபடியும் ஜெய்ஹிந்த்புரம் வந்துவிடுவேன். அடுத்த நாள் அதிகாலையில் அப்பா வேலைக்குக் கிளம்புகையில் சைக்கிள் பங்ச்சர் ஆகியிருந்தால் அப்பாவின் திட்டுகள் அரைத்தூக்கத்தில் காதில் விழுந்தவாறே எழுந்திருப்பேன். அப்போதெல்லாம் கூட எனக்கு என்று ஒரு சைக்கிள் இருந்தால் தேவலாம் என்று நினைப்பேன். அவ்வப்போது பள்ளிக்குச் சைக்கிளில் போகும் வாய்ப்புகளும் கிட்டின. மெதுவாக டிராபிக் சிக்னல்களிலும் நின்று செல்லும் என்னை பைக்கில் செல்பவர்கள் புன்னகைத்துச் சென்றது நினைவில் நிற்கிறது.
பின்னர் கரூரில் வாழச் சென்ற பிறகு சைக்கிளின் அத்தியாவசியம் அதிகாமாக செகன்ட் ஹாண்டில் ஒரு சைக்கிள் கிடைக்க மிதந்தேன். ஆனால் அதன் அருமை அனுபவிக்கும்போது தெரியவில்லை. எத்தனையோ முறை ஓவராய்லிங் செய்து கிட்டத்தட்ட மூன்று சைக்கிள்கள் செகன்ட் ஹாண்டில் மாற்றி மறுபடி மதுரை செல்லுகையில் வண்டியை விற்றுவிட்டேன். மதுரையில் அப்பா அப்போது டிவிஎஸ்50 வாங்கியிருக்க மேலும் உற்சாகம் அடைந்து அதில் நகரை வலம் வர ஆரம்பித்தேன்.
ஆனாலும் சைக்கிள் மேல் மோகம் குறைந்தபாடில்லை. வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு பைக், ஸ்கூட்டர் மேல் ஆர்வம் வந்து சொந்தமாக ஆக்டிவா வாங்கியபின் அதுவும் ஒரு ரதம் ஆகிவிட்டது. மெதுவாக சைக்கிள் வாங்கும் எண்ணமும் மங்கிவிட்டது.
சற்றேறக்குறைய நான்கைந்து மாதங்களுக்கு முன் சைக்கிள் ஓட்டுவதின் சாதக அம்சங்கள் பற்றிப் படித்த பிறகு மீண்டும் ஆசை தலை தூக்கியது. அதிலும் நமக்கு நடிகர்கல்தானே ஆதர்சம். நடிகர் கார்த்தி சைக்கிள் மராத்தான்களில் பங்கு பெற்று பேட்டிகள் தந்ததைப் பார்த்து நாமும் ஓட்டினால் என்ன என்ற ஆசை வந்தது. போதாத குறைக்கு ஆர்யாவும், மிலிந்த் சோமனும் பதக்கங்கள் வெல்ல பேராசையாக மாறிவிட்டது புதிய சைக்கிள் வாங்கும் எண்ணம்.
கூடிய விரைவில் வேறு மாநிலத்திற்கே மாற்றல் எதிர்பார்க்கும் நேரத்தில் சைக்கிள் தேவையா என அனைவரும் கேட்க அதை அங்கேயே கொண்டு போகப்போகிறேன் என்று சொல்லி வாயடைக்கும் நேரம் எப்படி என்ற கேள்விக்கு என்னிடமே பதிலில்லை. மகளுக்கு சைக்கிள் வாங்கவேண்டிய வயதில் நான் ஒரு புது சைக்கிள் வாங்குவது தவறுதான் என்றாலும் நானே செலவழித்து எனக்காக ஒரு மிதிவண்டி வாங்கிவிட்டேன்.
வீட்டில் அனைவரின் ஏச்சுபேச்சையும் மீறி நான் வாங்கிய சைக்கிள் ஓட்ட வெளியில் கிளம்புகையில் அப்பா நான் என்று ஓடிவரும் மகளையும் அழைத்துக்கொண்டு சாலைகளில் செல்கையில் பயந்துவருது. ரியர்வ்யு மிரர் இன்றி மகளுக்கும் பாரில் கால் எட்டாமல் காலை எப்போது சக்கரத்தில் விடுவாளோ என்று பத்தடிக்கு ஒருமுறை நிறுத்தி பின்னால் பார்த்துக்கொண்டே செல்வது தரை பார்க்காமல் கயிற்றில் நடப்பதற்கு சமமாக உள்ளது.

அதனால் ஆயுதபூஜைக்குப் பிறகு என் சைக்கிள் ஓட்ட ஆளின்றி ஓரமாக நிற்கிறது. அதன் எதிர்காலம் கேள்விக்குறிதான் போல:-P

Wednesday, March 25, 2015

அம்மா கோண்டு

ஏப்ரல் 10ஆம் தேதி அம்மாவின் பிறந்தநாள்! அந்தமானில் இருப்பாள்!
ஏற்கனவே ரசனைக்காரர் அம்மாவைப் பற்றி அழகான பதிவிட்டிருந்தாலும் இது ஏழைக்கேற்ற எள்ளுருண்டை போல! சகித்துக்கொள்ளவும்!
உலகின் மற்ற எல்லா அம்மாக்கள் போலவே பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளாதவள். அம்மாவை மகிழ்விக்க ப்ரியா சிஸ்டர்சின் பெருமாள் உன் திருநாமமோ, நித்யஶ்ரீயின் சதா சந்தோஷம் தந்திடும் திருப்பதியோடவுன்லோடு செய்தால் போதும்! அதிலேயே பேருவகை கொண்டுவிடுவாள்.
பெரும்பாலும் கோபமே வராது!
மும்பையில் பணிபரிகையில் வீடு வந்தால் ஆறில் நான்கு நாட்கள் வெளியில் சுற்றிவிட்டு இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் வீடு புகுவேன்; தங்கைதான் கடிந்துகொள்வாள், "வீட்டுல சாப்பிட உனக்கென்னடா கேடு, அவ உனக்காக சமையல் பண்ணி வெச்சுட்டு சாப்பிடாம இருக்காடா" என்பாள். ஆனாலும் அம்மா, "நீ சந்தோஷமா இருந்தாலே போதுன்டா" என்பாள். மீண்டும் மும்பை கிளம்புகையில் கண்ணீருடன் நிற்கும் அம்மாவைப் பார்க்கும் தைரியமே இராது!
ஏழு, எட்டு வகுப்புகளில் கணக்கு வீட்டுப்பாடம் கைவராது போனால் வரும் ஆற்றாமையால் பேனாவைத் தூக்கியெறிந்து ஆர்ப்பாட்டம் செய்வேன். அம்மா என்னை அமைதிப்படுத்தி, "எனக்கு நீ சொல்லித்தா; உனக்கு நான் சொல்லித்தரேன்" என்பாள். பி.யு.சி அவளைக் கைவிடவில்லை. பத்து நிமிடங்களில் கணித சூட்சுமத்தை அழகாக சொல்லித்தருவாள். ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விடுவேன். உடன்பிறந்த நால்வரின் கல்விக்காகத் தன் படிப்பைத் தியாகம் செய்த அம்மாவை மேல் படிக்க வைக்காத பாட்டியின் மீது சமயங்களில் கடுங்கோபம் வரும்.
என் பள்ளிப்பருவத்தில் அம்மா வேலைக்குச் செல்ல நேர்ந்தது. மாதம் கிடைத்த சொற்ப வருமானத்தில் எங்கள் இருவரின் கல்விச்செலவையும் தாண்டி அவள் குடும்பம் நடத்திய பாங்கில் எட்டூருக்குக் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாம்.
எவர் கையையும் எதிர்பார்க்காது தங்கையின் திருமணத்தைத் திறம்பட நடத்தியபோது, தேவதையாகவே தோன்றினாள்!
கூடவே இருந்து கஷ்டங்களை அனுபவித்ததால், நான் அருகில் இல்லாது போகும் துக்கத்தைத் தர, அவளை விட்டுவிட்டு வேறேதும் ஊருக்குச் செல்ல, மனமில்லாமல் போகிறது. அதனாலேயே அம்பத்தூர் தாண்டினால் Homesick போல Mom sick வந்துவிடுகிறது!
பணியின் தன்மையினால் அவளை எங்கும் அழைத்துச் செல்ல இயலாதது என் துரதிர்ஷ்டம். யாரேனும் தீர்த்தயாத்திரை சென்றால் அவளோடு இணக்கமாக இருப்பவர் யாராகிலும் இருந்தால் போய்வா என்று சொல்லிவிடுவேன். காசி, கயா எல்லாம் போய்வந்து, "ரொம்ப தாங்க்ஸ்பா" என்றாள். நெகிழ்ந்துவிட்டேன்.
அம்மாவை விமானத்தில் அழைத்துச்செல்ல ஆசைப்பட்டேன். இப்போது மாமாவின் அழைப்பின் பேரில் இரண்டு சித்திகளோடு அந்தமான் போகிறாள். எப்படியோ சாத்தியமாகப்போகிறது!
ஆனால் இன்றளவும் அப்பாவுக்குப் பயந்து, சம்பாதிக்க ஆரம்பித்தபின் எனக்கும் பயப்பட ஆரம்பித்துவிட்டாள், அம்மா. இதை என் தோல்வியாகவே கருதுவேன்.
தங்கையின் திருமணத்தில் தன் கை ஓங்கியிராத காரணத்தால் என் திருமணத்தைத் தன் முனைப்பில் நடத்திய அப்பா, தற்போதைய என் மனைவியிடம் அப்போது சொன்னது, " அவன் சரியான அம்மா கோண்டு; அவள் என்ன சொன்னாலும் தலையாட்டுவான்". இருந்துவிட்டுப் போகிறேன். என்ன இப்போ?

புகைப்படத்தில் உள்ளது என் அம்மாவும் என் மகளும்:-)

Saturday, November 8, 2014

தீபாவளியன்று பெய்த மழை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது!

அப்போது நான் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் சீருடை வெள்ளைச் சட்டையும் சாம்பல் நிற பேண்டும்! அதை அணிந்து கோமாளியாகவே வழக்கமாகச் சென்றுகொண்டிருந்த நான், தீபாவளிக்கு வாங்கிய பேன்ட் ஷர்ட்டில் உண்மையிலேயே அழகாக இருந்தேன் அல்லது இருப்பதாக நினைத்துக்கொண்டேன்.

நிற்க. இந்த இடுகை என் உடையைப் பற்றியதல்ல!

அந்தப் பதினாறு வயது, எல்லோரின் வாழ்விலும் ஒருமுறையேனும் வீசும் தென்றல் என் வாழ்விலும் தோன்றிய காலம் அது! நாங்கள் ட்யுஷன் பயின்ற ஆசிரியரிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த சில மாணவிகளும் பயின்றனர்! முழுக்க முழுக்க  ஆண்கள் பள்ளியில் பயின்ற எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அது ஒரு இனிய நேரமாக அமைந்தது!

எப்போதும் போல மாணவிகளில் ஒருத்தி கோவில் தீபமாக எங்கள் கண்களுக்குக் காட்சி தர ஒவ்வொருவரும் அவளைக் காதலிக்க ஆரம்பித்தோம். இதனிடையே சிறந்த திறன் எதுவுமின்றி பெரிய படிப்புமின்றி இருந்த என்னைச் சுற்றி இருந்த நண்பர்கள் இரண்டு பேர் என்னையும் அவளையும் இணைத்து பேச ஆரம்பிக்க நண்பர்களுக்குள் சண்டை மூளக் காரணமாயிருந்தாள்.

குடும்பத்தில் அப்போது இருந்த இறுக்கமான சூழ்நிலையில் அந்தத் தருணங்கள் என்னுள் ஒரு மயக்கத்தை ஏற்படுத்த நானும் அந்தப் பெண்ணை விரும்ப ஆரம்பித்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் வியாபித்து பாடங்களை மறக்க வைத்து அவளே அறியாமல் ஒரு தோள்வியாளனைத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.

தீபாவளியை அடுத்து வந்த ஒரு நாள் மாலையில், நண்பர்கள் யாரும் வர மறுத்துவிட்ட ட்யூஷனுக்கு நான் மட்டும் கிளம்ப, ஏற்கனவே கருமேகங்கள் சூழ்ந்திருந்த வானம் அப்போது தூற ஆரம்பித்திருந்தது. அந்தப் பெண் எனது உடையைப் பார்த்தவுடன் என்னைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் மழை பெய்தாலும் பரவாயில்லை என்று நனைந்துகொண்டே சாரின் வீட்டுக்குச் செல்ல, வீட்டு வாசலில் ஒரு சைக்கிள் கூடத் தென்படவில்லை. கனத்த மனதுடன் போர்டிகோவில் நின்றபடி சார் என்றழைத்தேன். சாரின் மகள் வந்து " என்ன அண்ணா, இப்படி நனைஞ்சு வந்திருக்கீங்க? இன்னிக்கு ட்யுஷன் இல்லையே, உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்க உள்ளே கட்டியிருந்த கோட்டை இடிய ஆரம்பித்தது!

அதன் பிறகு மற்ற பாடங்களுக்காக அவள் மேற்கொண்ட சிறப்பு வகுப்புகள் இந்த ட்யூஷனுக்கு வர இடையூறாக இருப்பதால் அவள் மற்றும் அவளது தோழிகள் அனைவரும் நின்றுவிட்டனர். அதன் பின்னர் அவளை நான் வாழவல் சந்திக்கவேயில்லை. மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, வெகு காலம் கழித்தே அவள் பள்ளிப்படிப்புக்குப் பிறகு தந்தையின் வேலை மாற்றம் காரணமாக ஊரை விட்டே சென்றுவிட்டது தெரிய வந்தது!

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆயிற்று அவள் நினைவுகள் காதலில் இருந்து ஒரு கனவாக மறைய! இருந்தாலும் அந்த மழை நேரத்து மாலை மறக்க முடியாத ஒரு அழகான நினைவு!

Monday, December 24, 2012

vanmurai vendam

இன்று நான் எழுதும் முதல் ப்ளாக் இது.

தில்லியில்  மாணவர்கள் போராட்டம் உச்சகட்டத்திற்கு செல்லும் நேரம்;

மாணவர்கள் ஒற்றுமை வியக்க வைத்தாலும் வன்முறை வேண்டாமே?

நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயங்கள் அமைதியின் மூலமே கிடைக்கும்.

வன்முறை வேண்டாம் நண்பர்களே.

ஒற்றுமையுடன் போராடி அமைதியுடன் வெல்வோம் திருத்தி எழுதிய தீர்ப்புகளை.