எல்லோரையும் போல் இல்லாமல் சைக்கிள் கற்றுகொண்டதே எட்டு
வயதில்தான். பிரம்மப்ரயத்தனங்களுக்குப் பிறகு கால்களில் நான்கைந்து பெருங்காயத்துடன்
சைக்கிள் கற்றுக்கொண்ட காலத்தில் ஒன்பதாவது மேகங்களில் மிதந்தேன். என்னை விட
சிறுவயதுச் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டுகையில் வரும் பொறாமை தொலைந்து போயிருந்தது.
சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அப்பாவிடம்
கேட்க, வேண்டும் போது அவர் சைக்கிள்-ஐ ஓட்டச் சொல்ல, கடுப்பானேன். தவிர உயரமும்
போதாது.
அப்பாவிற்கு நெல்லையில் இருந்து மதுரைக்கு மாற்றலாகிச்
சென்றபோது சித்தப்பா கொடுத்த BSA-SLR ஐ நானும் ஓட்ட ஆரம்பித்தேன். அவர்
வேலைக்குச் செல்லாத நேரங்களில் என் தேராக அமைந்தது அந்த சைக்கிள். மெதுவாகக்
கிளம்பி ஜீவா நகர் தாண்டி டிவிஎஸ் நகரில் புகுந்து (அப்போது அதிகம் நானறியாத
அழகிரியின் வீட்டு வழியாக) 19C பஸ் ரூட்டில் பழங்காநத்தம் ரெயில்வே
கிராசிங்கில் வலப்புறம் திரும்பி மறுபடியும் ஜெய்ஹிந்த்புரம் வந்துவிடுவேன். அடுத்த
நாள் அதிகாலையில் அப்பா வேலைக்குக் கிளம்புகையில் சைக்கிள் பங்ச்சர் ஆகியிருந்தால்
அப்பாவின் திட்டுகள் அரைத்தூக்கத்தில் காதில் விழுந்தவாறே எழுந்திருப்பேன்.
அப்போதெல்லாம் கூட எனக்கு என்று ஒரு சைக்கிள் இருந்தால் தேவலாம் என்று நினைப்பேன்.
அவ்வப்போது பள்ளிக்குச் சைக்கிளில் போகும் வாய்ப்புகளும் கிட்டின. மெதுவாக டிராபிக்
சிக்னல்களிலும் நின்று செல்லும் என்னை பைக்கில் செல்பவர்கள் புன்னகைத்துச் சென்றது
நினைவில் நிற்கிறது.
பின்னர் கரூரில் வாழச் சென்ற பிறகு சைக்கிளின்
அத்தியாவசியம் அதிகாமாக செகன்ட் ஹாண்டில் ஒரு சைக்கிள் கிடைக்க மிதந்தேன். ஆனால்
அதன் அருமை அனுபவிக்கும்போது தெரியவில்லை. எத்தனையோ முறை ஓவராய்லிங் செய்து கிட்டத்தட்ட
மூன்று சைக்கிள்கள் செகன்ட் ஹாண்டில் மாற்றி மறுபடி மதுரை செல்லுகையில் வண்டியை
விற்றுவிட்டேன். மதுரையில் அப்பா அப்போது டிவிஎஸ்50 வாங்கியிருக்க
மேலும் உற்சாகம் அடைந்து அதில் நகரை வலம் வர ஆரம்பித்தேன்.
ஆனாலும் சைக்கிள் மேல் மோகம் குறைந்தபாடில்லை. வேலைக்குச்
செல்ல ஆரம்பித்த பிறகு பைக், ஸ்கூட்டர் மேல் ஆர்வம் வந்து சொந்தமாக ஆக்டிவா
வாங்கியபின் அதுவும் ஒரு ரதம் ஆகிவிட்டது. மெதுவாக சைக்கிள் வாங்கும் எண்ணமும்
மங்கிவிட்டது.
சற்றேறக்குறைய நான்கைந்து மாதங்களுக்கு முன் சைக்கிள்
ஓட்டுவதின் சாதக அம்சங்கள் பற்றிப் படித்த பிறகு மீண்டும் ஆசை தலை தூக்கியது.
அதிலும் நமக்கு நடிகர்கல்தானே ஆதர்சம். நடிகர் கார்த்தி சைக்கிள் மராத்தான்களில்
பங்கு பெற்று பேட்டிகள் தந்ததைப் பார்த்து நாமும் ஓட்டினால் என்ன என்ற ஆசை வந்தது.
போதாத குறைக்கு ஆர்யாவும், மிலிந்த் சோமனும் பதக்கங்கள் வெல்ல பேராசையாக
மாறிவிட்டது புதிய சைக்கிள் வாங்கும் எண்ணம்.
கூடிய விரைவில் வேறு மாநிலத்திற்கே மாற்றல் எதிர்பார்க்கும்
நேரத்தில் சைக்கிள் தேவையா என அனைவரும் கேட்க அதை அங்கேயே கொண்டு போகப்போகிறேன்
என்று சொல்லி வாயடைக்கும் நேரம் எப்படி என்ற கேள்விக்கு என்னிடமே பதிலில்லை. மகளுக்கு
சைக்கிள் வாங்கவேண்டிய வயதில் நான் ஒரு புது சைக்கிள் வாங்குவது தவறுதான்
என்றாலும் நானே செலவழித்து எனக்காக ஒரு மிதிவண்டி வாங்கிவிட்டேன்.
வீட்டில் அனைவரின் ஏச்சுபேச்சையும் மீறி நான் வாங்கிய சைக்கிள்
ஓட்ட வெளியில் கிளம்புகையில் அப்பா நான் என்று ஓடிவரும் மகளையும் அழைத்துக்கொண்டு
சாலைகளில் செல்கையில் பயந்துவருது. ரியர்வ்யு மிரர் இன்றி மகளுக்கும் பாரில் கால்
எட்டாமல் காலை எப்போது சக்கரத்தில் விடுவாளோ என்று பத்தடிக்கு ஒருமுறை நிறுத்தி
பின்னால் பார்த்துக்கொண்டே செல்வது தரை பார்க்காமல் கயிற்றில் நடப்பதற்கு சமமாக
உள்ளது.
அதனால் ஆயுதபூஜைக்குப் பிறகு என் சைக்கிள் ஓட்ட ஆளின்றி
ஓரமாக நிற்கிறது. அதன் எதிர்காலம் கேள்விக்குறிதான் போல:-P

No comments:
Post a Comment