Monday, October 26, 2015

சைக்கிள் காதை

எல்லோரையும் போல் இல்லாமல் சைக்கிள் கற்றுகொண்டதே எட்டு வயதில்தான். பிரம்மப்ரயத்தனங்களுக்குப் பிறகு கால்களில் நான்கைந்து பெருங்காயத்துடன் சைக்கிள் கற்றுக்கொண்ட காலத்தில் ஒன்பதாவது மேகங்களில் மிதந்தேன். என்னை விட சிறுவயதுச் சிறுவர்கள் சைக்கிள் ஓட்டுகையில் வரும் பொறாமை தொலைந்து போயிருந்தது.
சொந்தமாக ஒரு சைக்கிள் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அப்பாவிடம் கேட்க, வேண்டும் போது அவர் சைக்கிள்-ஐ ஓட்டச் சொல்ல, கடுப்பானேன். தவிர உயரமும் போதாது.
அப்பாவிற்கு நெல்லையில் இருந்து மதுரைக்கு மாற்றலாகிச் சென்றபோது சித்தப்பா கொடுத்த BSA-SLR ஐ நானும் ஓட்ட ஆரம்பித்தேன். அவர் வேலைக்குச் செல்லாத நேரங்களில் என் தேராக அமைந்தது அந்த சைக்கிள். மெதுவாகக் கிளம்பி ஜீவா நகர் தாண்டி டிவிஎஸ் நகரில் புகுந்து (அப்போது அதிகம் நானறியாத அழகிரியின் வீட்டு வழியாக) 19C பஸ் ரூட்டில் பழங்காநத்தம் ரெயில்வே கிராசிங்கில் வலப்புறம் திரும்பி மறுபடியும் ஜெய்ஹிந்த்புரம் வந்துவிடுவேன். அடுத்த நாள் அதிகாலையில் அப்பா வேலைக்குக் கிளம்புகையில் சைக்கிள் பங்ச்சர் ஆகியிருந்தால் அப்பாவின் திட்டுகள் அரைத்தூக்கத்தில் காதில் விழுந்தவாறே எழுந்திருப்பேன். அப்போதெல்லாம் கூட எனக்கு என்று ஒரு சைக்கிள் இருந்தால் தேவலாம் என்று நினைப்பேன். அவ்வப்போது பள்ளிக்குச் சைக்கிளில் போகும் வாய்ப்புகளும் கிட்டின. மெதுவாக டிராபிக் சிக்னல்களிலும் நின்று செல்லும் என்னை பைக்கில் செல்பவர்கள் புன்னகைத்துச் சென்றது நினைவில் நிற்கிறது.
பின்னர் கரூரில் வாழச் சென்ற பிறகு சைக்கிளின் அத்தியாவசியம் அதிகாமாக செகன்ட் ஹாண்டில் ஒரு சைக்கிள் கிடைக்க மிதந்தேன். ஆனால் அதன் அருமை அனுபவிக்கும்போது தெரியவில்லை. எத்தனையோ முறை ஓவராய்லிங் செய்து கிட்டத்தட்ட மூன்று சைக்கிள்கள் செகன்ட் ஹாண்டில் மாற்றி மறுபடி மதுரை செல்லுகையில் வண்டியை விற்றுவிட்டேன். மதுரையில் அப்பா அப்போது டிவிஎஸ்50 வாங்கியிருக்க மேலும் உற்சாகம் அடைந்து அதில் நகரை வலம் வர ஆரம்பித்தேன்.
ஆனாலும் சைக்கிள் மேல் மோகம் குறைந்தபாடில்லை. வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு பைக், ஸ்கூட்டர் மேல் ஆர்வம் வந்து சொந்தமாக ஆக்டிவா வாங்கியபின் அதுவும் ஒரு ரதம் ஆகிவிட்டது. மெதுவாக சைக்கிள் வாங்கும் எண்ணமும் மங்கிவிட்டது.
சற்றேறக்குறைய நான்கைந்து மாதங்களுக்கு முன் சைக்கிள் ஓட்டுவதின் சாதக அம்சங்கள் பற்றிப் படித்த பிறகு மீண்டும் ஆசை தலை தூக்கியது. அதிலும் நமக்கு நடிகர்கல்தானே ஆதர்சம். நடிகர் கார்த்தி சைக்கிள் மராத்தான்களில் பங்கு பெற்று பேட்டிகள் தந்ததைப் பார்த்து நாமும் ஓட்டினால் என்ன என்ற ஆசை வந்தது. போதாத குறைக்கு ஆர்யாவும், மிலிந்த் சோமனும் பதக்கங்கள் வெல்ல பேராசையாக மாறிவிட்டது புதிய சைக்கிள் வாங்கும் எண்ணம்.
கூடிய விரைவில் வேறு மாநிலத்திற்கே மாற்றல் எதிர்பார்க்கும் நேரத்தில் சைக்கிள் தேவையா என அனைவரும் கேட்க அதை அங்கேயே கொண்டு போகப்போகிறேன் என்று சொல்லி வாயடைக்கும் நேரம் எப்படி என்ற கேள்விக்கு என்னிடமே பதிலில்லை. மகளுக்கு சைக்கிள் வாங்கவேண்டிய வயதில் நான் ஒரு புது சைக்கிள் வாங்குவது தவறுதான் என்றாலும் நானே செலவழித்து எனக்காக ஒரு மிதிவண்டி வாங்கிவிட்டேன்.
வீட்டில் அனைவரின் ஏச்சுபேச்சையும் மீறி நான் வாங்கிய சைக்கிள் ஓட்ட வெளியில் கிளம்புகையில் அப்பா நான் என்று ஓடிவரும் மகளையும் அழைத்துக்கொண்டு சாலைகளில் செல்கையில் பயந்துவருது. ரியர்வ்யு மிரர் இன்றி மகளுக்கும் பாரில் கால் எட்டாமல் காலை எப்போது சக்கரத்தில் விடுவாளோ என்று பத்தடிக்கு ஒருமுறை நிறுத்தி பின்னால் பார்த்துக்கொண்டே செல்வது தரை பார்க்காமல் கயிற்றில் நடப்பதற்கு சமமாக உள்ளது.

அதனால் ஆயுதபூஜைக்குப் பிறகு என் சைக்கிள் ஓட்ட ஆளின்றி ஓரமாக நிற்கிறது. அதன் எதிர்காலம் கேள்விக்குறிதான் போல:-P

Wednesday, March 25, 2015

அம்மா கோண்டு

ஏப்ரல் 10ஆம் தேதி அம்மாவின் பிறந்தநாள்! அந்தமானில் இருப்பாள்!
ஏற்கனவே ரசனைக்காரர் அம்மாவைப் பற்றி அழகான பதிவிட்டிருந்தாலும் இது ஏழைக்கேற்ற எள்ளுருண்டை போல! சகித்துக்கொள்ளவும்!
உலகின் மற்ற எல்லா அம்மாக்கள் போலவே பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ளாதவள். அம்மாவை மகிழ்விக்க ப்ரியா சிஸ்டர்சின் பெருமாள் உன் திருநாமமோ, நித்யஶ்ரீயின் சதா சந்தோஷம் தந்திடும் திருப்பதியோடவுன்லோடு செய்தால் போதும்! அதிலேயே பேருவகை கொண்டுவிடுவாள்.
பெரும்பாலும் கோபமே வராது!
மும்பையில் பணிபரிகையில் வீடு வந்தால் ஆறில் நான்கு நாட்கள் வெளியில் சுற்றிவிட்டு இரவுச் சாப்பாட்டுக்கு மட்டும் வீடு புகுவேன்; தங்கைதான் கடிந்துகொள்வாள், "வீட்டுல சாப்பிட உனக்கென்னடா கேடு, அவ உனக்காக சமையல் பண்ணி வெச்சுட்டு சாப்பிடாம இருக்காடா" என்பாள். ஆனாலும் அம்மா, "நீ சந்தோஷமா இருந்தாலே போதுன்டா" என்பாள். மீண்டும் மும்பை கிளம்புகையில் கண்ணீருடன் நிற்கும் அம்மாவைப் பார்க்கும் தைரியமே இராது!
ஏழு, எட்டு வகுப்புகளில் கணக்கு வீட்டுப்பாடம் கைவராது போனால் வரும் ஆற்றாமையால் பேனாவைத் தூக்கியெறிந்து ஆர்ப்பாட்டம் செய்வேன். அம்மா என்னை அமைதிப்படுத்தி, "எனக்கு நீ சொல்லித்தா; உனக்கு நான் சொல்லித்தரேன்" என்பாள். பி.யு.சி அவளைக் கைவிடவில்லை. பத்து நிமிடங்களில் கணித சூட்சுமத்தை அழகாக சொல்லித்தருவாள். ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விடுவேன். உடன்பிறந்த நால்வரின் கல்விக்காகத் தன் படிப்பைத் தியாகம் செய்த அம்மாவை மேல் படிக்க வைக்காத பாட்டியின் மீது சமயங்களில் கடுங்கோபம் வரும்.
என் பள்ளிப்பருவத்தில் அம்மா வேலைக்குச் செல்ல நேர்ந்தது. மாதம் கிடைத்த சொற்ப வருமானத்தில் எங்கள் இருவரின் கல்விச்செலவையும் தாண்டி அவள் குடும்பம் நடத்திய பாங்கில் எட்டூருக்குக் கோயில் கும்பாபிஷேகம் செய்யலாம்.
எவர் கையையும் எதிர்பார்க்காது தங்கையின் திருமணத்தைத் திறம்பட நடத்தியபோது, தேவதையாகவே தோன்றினாள்!
கூடவே இருந்து கஷ்டங்களை அனுபவித்ததால், நான் அருகில் இல்லாது போகும் துக்கத்தைத் தர, அவளை விட்டுவிட்டு வேறேதும் ஊருக்குச் செல்ல, மனமில்லாமல் போகிறது. அதனாலேயே அம்பத்தூர் தாண்டினால் Homesick போல Mom sick வந்துவிடுகிறது!
பணியின் தன்மையினால் அவளை எங்கும் அழைத்துச் செல்ல இயலாதது என் துரதிர்ஷ்டம். யாரேனும் தீர்த்தயாத்திரை சென்றால் அவளோடு இணக்கமாக இருப்பவர் யாராகிலும் இருந்தால் போய்வா என்று சொல்லிவிடுவேன். காசி, கயா எல்லாம் போய்வந்து, "ரொம்ப தாங்க்ஸ்பா" என்றாள். நெகிழ்ந்துவிட்டேன்.
அம்மாவை விமானத்தில் அழைத்துச்செல்ல ஆசைப்பட்டேன். இப்போது மாமாவின் அழைப்பின் பேரில் இரண்டு சித்திகளோடு அந்தமான் போகிறாள். எப்படியோ சாத்தியமாகப்போகிறது!
ஆனால் இன்றளவும் அப்பாவுக்குப் பயந்து, சம்பாதிக்க ஆரம்பித்தபின் எனக்கும் பயப்பட ஆரம்பித்துவிட்டாள், அம்மா. இதை என் தோல்வியாகவே கருதுவேன்.
தங்கையின் திருமணத்தில் தன் கை ஓங்கியிராத காரணத்தால் என் திருமணத்தைத் தன் முனைப்பில் நடத்திய அப்பா, தற்போதைய என் மனைவியிடம் அப்போது சொன்னது, " அவன் சரியான அம்மா கோண்டு; அவள் என்ன சொன்னாலும் தலையாட்டுவான்". இருந்துவிட்டுப் போகிறேன். என்ன இப்போ?

புகைப்படத்தில் உள்ளது என் அம்மாவும் என் மகளும்:-)